திருடன் – a short story

“ஏன்டா! உனக்கு இதெல்லாம் தேவையா? படிச்ச பையன் தானே நீ!”

“இல்ல சார், இந்த ஒரு தடவ விட்டுருங்க சார், தெரியாம பண்ணிட்டேன்!”

“என்னடா தெரியாம பண்ணிட்ட?! விசயத்த பாத்தா ரொம்ப ப்ளான் பண்ணியில்ல செஞ்ச மாதிரி இருக்கு? இதுக்கு முன்னாடி மாட்டியிருக்கியா?”

“சத்தியமா இல்ல சார்!”

வழக்கமான நாள் அன்று. ஆனால் இந்த கேஸ் சற்றே வித்தியாசமானது.

கேஸ் கொடுத்தவர்களே திருடனையும் பிடித்து விட்டார்கள், பிரைவேட் டிடெக்டிவ் வைத்து.

சில நாட்கள் முன் கேஸ் பதிவு செய்ய வந்திருந்தனர். வெறும் பேப்பரில் எழுதி வாங்கி, அவர்களை அப்படியே அனுப்பி வைத்து மறந்தே போயிருந்த சமயம்.

“நாங்க செய்ய வேண்டிய வேல, நீங்களே செஞ்சிட்டீங்க!” வெட்கமின்றி கான்ஸ்டபிள் சொல்ல, வந்தவர்கள் இன்ஸ்பெக்டர் எப்போது வருவார் என்று கேட்டனர்.

“சார் இன்னும் வரல. இங்க ஒரு கையெழுத்து போட்டுட்டு போங்க, இவன நாங்க பாத்துக்கறோம்!” கான்ஸ்டபிள் சொல்ல, தயக்கத்தோடு கையெழுத்திட்டு சென்றார்கள்.

“ரவி, இவன சார் வர வரைக்கும் சைடுலே உக்கார வை.”

“சார், சார்…”

“நீ மூடிக்கிட்டு இருக்கல, உன் துணிய கழட்டி செல்லுல உக்கார வெச்சிருவேன்!”

“சார், சார், வேணாம் சார்!” அவன் கண்ணில் முதல் முறை மாட்டிகொண்ட திருடனின் பயம் தெரிந்தது.

சற்று நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் வந்தார்.

“என்னய்யா, அந்த கேமரா கடை திருட்டு மறுபடியும் வந்திருக்காமே?”

“ஆமா சார், ஒரே தொல்லையா போச்சி! யாரோ டிடெக்டிவ் வெச்சி பிடிச்சிட்டாங்க. திருடுனவன் ஏதோ சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறான். அவன ரூம்லே தான் வெச்சிருக்கோம்.”

“சாப்ட்வேரா? காசு ஏதாவது தேறுமா?”

“அட நீங்க வேற சார்! இந்த நாயி, கைலே பத்து பைசா இல்லாம கிரெடிட் கார்டு தொல்ல தாங்கமே திருடிட்டான். அவன் அப்பன் அவன் என் புள்ளையே இல்ல, உள்ள போடுங்கன்னு சொல்றான்!”

அவனை கொண்டுவந்த போது அவன் கண்ணில் பயம். நாக்கில் எச்சில் வாடி போன தாகம் வேறு! நடுங்கி கொண்டே இன்ஸ்பெக்டர் முன் நின்றான்.

“டேய், உள்ள போனா போடற சாப்பாட்ட நாய் கூட தின்னாது. உங்கப்பன் உன்னை தண்ணி தெழிச்சிட்டான். அவனுங்க வேற கேஸ் போட சொல்லி ரொம்ப கட்டாயம் பண்றாங்க. எதாவது வெச்சிருக்கியா?” கான்ஸ்டபிள் கேட்டார்.

“சத்தியமா சொல்றேன் சார், ரொம்ப கஷ்டத்தில தான் இப்டி பண்ணிட்டேன்!”

“சார், இவன் தேருற மாதிரி தெரியல, பேசாம ஒரு வருஷம் உக்கார வெச்சிருங்க!”

“சார், சார், ப்ளீஸ் சார்.”

“ஏன்டா, கைல ரெண்டு பைசா இல்ல. கிரெடிட் கார்டு முழுசா உருவிட்டே. வண்டி எதாவது வெச்சிருக்கியா?”

“புல்லெட் இருக்கு சார்.”

“ரவி, அந்த புரோக்கர் ரமேசுக்கு போன் போட்டு புல்லெட் எடுத்துப்பானா கேழு.”

புல்லேட்டின் விபரங்களை வாங்கிகொண்டு ரவி சென்றான்.

“டேய், முப்பது தான் தேறுமாம். ரெண்டே நாழுல எல்லா பேப்பரும் பண்ணி தந்துடணும், சரியா?” இன்ஸ்பெக்டர் மேஜையின் மீதமர்ந்து, தடியால் தன மறுகையை தட்டியபடி கேட்டார்

வேறு வழியின்றி தலையை ஆட்டினான் அவன்.

“அந்த ரமேசுக்கு போன் போட்டு வீட்டுலே முப்பது குடுத்துட சொல்லு. வண்டி இவன் நாளைக்கு குடுத்துடுவான்” இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளிடம் சொன்னார்.

“சார், நமக்கு ஒரு பத்து?”

“என்னய்யா, கெடச்சதே எலும்பு துண்டு, அதுலே எச்சம் வேறயா? அடுத்ததுல பாத்துப்போம்.” என்று சொல்லி சென்று விட்டார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டர் வெழியே செல்லும் வரை காத்திருந்து முணுமுணுத்தார் கான்ஸ்டபிள்.

“இவன் திருடனா, அவன் திருடனா தெரியல!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *